Sunday, May 31, 2009

என் மக்களே எழுந்து நில்லுங்கள்!, அருட்தந்தை ஜெகத்கஸ்பர் நக்கீரனில், வரும் தொடர்.....

இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த புத்தகம் ஒன்று தந்த கருத்துக்களை நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். புத்தகத்தின் பெயர் “”தோல்வியின் பண்பாடு” – Culture of Defeat ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவர் ஜெர்மனி நாட்டுக்காரர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்டது.

படுதோல்வியின் வலியிலும் அவமானங்களிலும் உழன்ற ஜெர்மனி நாட்டு மக்களை பின்புலமாகக் கொண்டு வெளிவந்த புத்தகம். அப்புத்தகத்தின் மறக்க முடியாத சில வரிகள் இவை: “”உன்னை தோற்கடித்தவனின் இலட்சி யங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!”.

நான் பலமுறை பார்த்தும் சலித்துப் போகாத ஆங்கிலத் திரைப்படம் கிளாடியேட்டர் (Gladiator) மகத்தான ராணுவத் தளபதியான மாக்சிமுஸ், சதியால் சந்தையில் அடிமையாக்கப்பட்டு, உரோமாபுரி நகரத்து மக்களின் கேளிக்கைக்காக உயிரை பணயம் வைத்து சண்டையிடும் கிளாடியேட்டர் ஆகி, அப்பேரரசின் மன்ன னுக்கே சவால் விட்ட கதைதான் கிளாடியேட்டர். அப்படத்தின் ஒரு இடத்தில் மாமன்னன் ஜூலியஸ் சீசர் மாக்சிமுஸை தன் போர்க்களக் கூடாரத் திற்கு இரவுப் பொழுதில் அழைப்பார். “”வா… மாக்சிமுஸ் என் காதோடு கதை பேசு… உரோமாபுரி என்றால் என்ன?” என்று கேட்பார். என்ன பதில் சொல்வ தென்று தெரியாமல் திரைப்படத்தின் கதாநாயகன் மாக்சிமுஸ் நிற்பான். அவனை உற்றுப் பார்த்து சீசர் சொல் வார். “”உரோமாபுரி என்பது ஓர் எண்ணம். வனைவு. உயர்ந்தவை என நாம் கனவு கொள்ளும் அனைத்திற்கும் தாய்மடி கிடைக்குமிடம். மாக்சிமுஸ்… உரோமாபுரியின் இன்றைய ஒழுக்கம் அவநம்பிக்கை தருகிறது. இன்னும் ஓர் கடும்பனிக் காலத்தை அது தாக்குப் பிடித்து நிற்குமென நான் நம்பவில்லை. உன் படைகளை தயாராய் வைத்திரு. உரோமாபுரிக்கு நீ தேவை” என்பார் சீசர்.

“”சியர்சியாவின் சிவந்த குன்றுகளிலே அடிமைகளின் பிள்ளைகளும் அடிமைப் படுத்தியவர்களின் பிள்ளைகளும் ஒன்றாகக் கரம் கோர்த்து விளையாடித் திரியும் காலம் வரும் எனக் கனவொன்று வைத்திருக்கிறேன்… I have a dream் என்ற மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் உரையை நாம் மறக்க முடியுமா? அரை நூற்றாண்டிலேயே அவரது அரசியற் பேரன் பராக் ஒபாமா அடிமை வரலாற்றின் பழைய ரத்தக் கறைகளை புதிய கனவுகளால் கழுவிடும் உன்னதத்தினை காண்கிறபேறு நமது கண்களுக்குக் கிடைக்க வில்லையா?

கிளி ஜோசியக்காரர்களை எனக்குப் பிடிக்கும். நேரம் இருந்தால் எங்கு அவர்களை பார்த்தாலும் கையை நீட்டிவிடுவேன். அவர்கள் சொல்லும் எதையுமே நான் நம்புவதுமில்லை, அவர்கள் சொல்லும் எதுவும் நடப்பதுமில்லை. ஆனால், 50 ரூபாய் கொடுத்துவிட்டால் வஞ்சகமின்றி நம்பிக்கை வார்த்தைகளை மடி நிறைய கொட்டிக் கொடுப்பார்கள். நான் கை நீட்டுவதோ அவ் வார்த்தைகளுக்காக அல்ல. அவர்கள் கடைபிடிக்கும் தொழில்நுட்பத்தை ரசிப்பதற் காக. முதலில் ரெண்டும் கெட்டானாகத் தொடங்குவார்கள்… ஆபத்து என்பதுபோல் நடுவழியில் கொக்கி போடுவார்கள்… எல்லாம் சரியாகி பிரமாதமாக இருக்கும் என்ப தாக முடிப்பார்கள். இன்னும் 10 ரூபாய் போட்டுக் கொடுக்கலாம் போல் நமக்கு இருக்கும். நானறியா நாள் முதல் இயற்கை இரகசியமாய் வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று நம்பிக்கை வார்த்தைகளுக்கு இருக்கிற உயிர் தரும் ஆற்றல்.

பைபிளில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் படித்து, இப்போதும் மறக்காமல் வைத்திருக்கிற பகுதிகள் எவையென்று கேட்டால் கடவுள் தன் தூதர்கள் வழி, தோல்விகளை மட்டுமே சம்பத்தாய் சுமந்து வந்த தன் யூத மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள்தான். “”என் மக்களே… எழுந்து நில் லுங்கள்… உங்கள் துக்க உடைகளையும் துயரக் கோலத்தையும் தூரப் போடுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமாய் சிதறுண்டு போன என் பிள்ளைகளாகிய உங்களை மீண்டும் நான் கூட்டிச் சேர்ப்பேன்… அடிமைகளாய் சிதறிய உங்களை பெருமையின் ஆடைகள் அணிவித்து உரிமைக் குடிமக்களாய் கூட்டி வருவேன். அந்நாளில் பாலைவனத்தில் லீலி மலர்கள் பூக்கும். பாறைகளினின்று நீரூற்றுகள் புறப்படும்… இவ்வாறு பல நூறு வரிகளை நான் மறவாது மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையும் வசீகரமாய் தூவிச் செல்கிற நம்பிக்கை.

எனவே தான் நொறுங்கிப் போய், இருள் கவிந்து, செல்லும் திசை தெரியாது நிற்கும் நமது ஈழத்தின் ரத்த உறவுகளுக்கு நாம் தொடர்ந்து தரவேண்டியது நம்பிக்கை. எப்படி மழையும் பனியும் மண்ணில் விழுந்தபின் தம் பயனைத் தராது திரும்புவதில்லையோ அவ்வாறே நம்பிக்கை வார்த்தைகளும். எல்லா இரவுகளும் விடியும். எல்லா கொடுமைகளும் முடியும். இலையுதிர் காலம் இதுவென்றால் வசந்தம் விரைவில் வருமென்றுதானே அர்த்தம்?

நான் எழுத்தாளன் அல்ல. எழுதிப் பெரிய பழக்கமும் இல்லை. நண்பர் காமராஜ் அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரிலேயே “மறக்க முடியுமா?’ எழுதத் தலைப்பட்டேன். எழுதத் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் ஈழத் தமிழ் மக்கள் மீதான இறுதி முற்றுகை தொடங்கியது. அதன்பின் என்னையே நான் ஆற்றுப்படுத்திக் கொள்ளும் களமாகவே தொடர்ந்து எழுதினேன். இக்களம் இல்லாதிருந்தால் ஒருவேளை நானே கூட உடைந்து போயிருப்பேன். நான் எழுதியவை உங்களில் எத்தனை பேருக்கு ஆறுதல் தந்ததென்பது எனக்குத் தெரியாது… ஆனால் நான் தகர்ந்து போய்விடாமல் தாங்கியது இந்த எழுத்து வடிகால்தான். எழுத்தின் வல்லமையை நீண்ட நாட்களுக்குப் பின் உணர உதவிய நக்கீரனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

கடந்த இதழ் படித்துவிட்டு “”எல்லாம்தான் முடிந்து போயிற்றே… இனியும் அவை பற்றி ஏன் எழுதிக் கிளற வேண்டும்… ஆட்சியில் இருப்போரிடமுள்ள தொடர்பு களை பழுது செய்யாமல் மக்களுக்கு இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்யலாமே…” என்று அக்கறை யுடன் அறிவுரை சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் நான் முதலில் சொன்னது, “சரியாக முடியாதவரை எதையுமே முடிந்துவிட்டதாகக் கருத முடியாது’. Nothing is settled until settled right. மீண்டும் நாம் அனைவருமாய் சொல்வோம், சரியாக முடியாதவரை எதுவும் முடிந்ததாகக் கருதப்பட முடியாது.

முக்கியமாக காழ்ப்புணர்வும் பகைமிகு தன்மையுமின்றி இதய நேர்மையுடன் முன்வைக்கப் படும் உண்மைகள், உறவுகளையும், பரஸ்பர மதிப்பினையும் வலுப்படுத்துமென்பதே எனது ஜனநாயக அனுபவமும், நம்பிக்கையும். நானொன்றும் கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குருவானவர் அல்ல. கொஞ்சம் விட்டேத்திதான். என்னிடத்தில் குறைகளும் பல உண்டு. எனினும் சுயநலனுக்காய் பொய்கள் சொன்னதாய் நினைவில்லை. அதுவும் மனித உயிர்கள் சம்பந்தப்படுகையில் உண்மை சொல்லத் தயங்குவதுபோல் பாவம் வேறெதுவுமில்லை.

உண்மைக்கு உள்ள பிறிதொரு குணாதிசயம் விடாப்பிடித்தன்மை. பொதுவாக நீங்கள் பார்த்தீர்களென்றால், பொய் காற்று வேகத்தில் பரவும். எல்லா இடத்திலும் முதல் ஆளாய் போய் நிற்கும். ஆனால் உண்மை, ஆமை போல. உருண்டு, புரண்டு, விழுந்து, எழுந்து, சிராய்ப்புகள் பட்டு, களைத்துப் போய் -ஆனால் வந்து சேரும். காலதாமதம் ஆகுமே தவிர, உண்மை நிச்சயம் வந்து சேரும்.

இதனை நான் இங்கு குறிப்பிட தனிப்பட்ட காரணமும் உண்டு. “சென்னை சங்கமம்’ தொடர்பானது அது.

2007 பெப்ருவரியில் முதல் “சென்னை சங்கமம்’ நிகழ்ந்தது. தமிழக கலை-பண்பாட்டுக் களத்தில் தீர்க்கமான தாக்கங்களை உருவாக்கி தொடரும் “சென்னை சங்கமம்’ அறிமுகமான கதை மிகவும் எளிமையானது. மயிலாப்பூர் லஸ் கோயில் சாலையிலுள்ள தமிழ் மையம் அலுவலகத்தில் கனிமொழி அவர்களோடான உரை யாடலில் பிறந்ததுதான் சென்னை சங்கமம். சென்னை நகர் கொண்டாடும் ஒரு பண்டிகை கூட தமிழர் பண்பாட்டு வரலாற்றை சார்ந்ததாக இல்லையே என்ற ஆதங்கத்தை அளவளாவி, ஏதேனும் செய்ய வேண்டுமெனப் பேசி, கிராமியக் கலைகளை மையப்படுத்தும் சிறியதோர் கலைவிழாவினை தை பொங்கல் காலத்தில் அமைக்கலாம் என முடி வெடுத்தோம்.

மிகச்சிறிய, ஆனால் செறிவான கலைவிழா எண்ணத்தை பூங்காக்கள், வீதிகளெங்கும் தமிழ் கலைகளின் மலர்ச்சியாய் விரிய வைக்கும் எண்ணம் தந்தது. சென்னை சங்கமம் போல் பெங்களூரில் “”பெங்களூரு ஹப்பா” நடத்தி வரும் குழுவினர். பெங்களூரில் நடத்துவது போல சென்னையிலும் நடத்தவேண்டுமென அவர்கள் வந்தி ருந்தார்கள். பல சுற்று விவாதங்கள் அவர்களோடு நடந்தன.

ஆனால் அவர்கள் பணம் செய்வதில் அதிக குறியாய் இருந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டதால் நாமே எல்லாம் செய்யலாம் என்று முடிவெடுத் தோம். அத்தெளிவான முடிவுக்கு காரணமாயிருந்தவர்களில் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு அவர்களும் ஓவியர் மருது அவர்களும் முக்கியமான வர்கள். உண்மையில் “சென்னை சங்கமம்’ என்று பெயர் சூட்டியது இறையன்பு அவர்கள். நீங்காது பதிந்துவிட்ட இளங்கன்று முகத்தினை முத்திரையாய் வரைந்தவர் மருது அவர்கள். இன்று சென்னை சங்கமம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கலை-பண்பாட்டு விழாவாக வளர்ந்து நிற்கிறது. ஈராயிரம் கலைஞர்கள், இருபது அரங்குகள், லட்சக்கணக்கான மக்கள் என பிரம்மாண்டமான இந்நிகழ்வை நிர் வகிக்கும் அனுபவங்களை எழுதவே ஏழெட்டு “மறக்க முடியுமா?’ களங்கள் தேவைப்படும். அது இப்போதைக்கு அவசியமில்லை. ஆனால், எதிர்பாராத பெருவெற்றியோடு நின்ற முதல் சங்கமத் திற்குப் பின் நடந்த சில நிகழ்வுகள் மறக்க முடியாதவை.

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன்

0 comments: