சென்னை: இலங்கையில் மரபணுச் சோதனை எனப்படும் டிஎன்ஏ டெஸ்ட்டிங் மற்றும் மேப்பிங் செய்வதற்காக அடிப்படை வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை என இந்திய தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் பி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சந்திரசேகரன் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் துறை இயக்குநராக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்தவர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ[^] விசாரணைக்கு பேருதவியாக இருந்தவர். இவர் தான் சிதைந்து போன தணு, சிவராசன் ஆகியோரின் உடல்களை அடையாளம் காண உதவினார்.
இந் நிலையில் பிரபாகரன் இறந்ததாக ராணுவம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரது டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்துவிட்டதாகவும், அவரது மகன் சார்லஸ் ஆண்டனியின் டிஎன்ஏ சோதனையும் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளது இலங்கை ராணுவம்.
இதுகுறித்து பெங்களூரில் உள்ள சந்திரசேகரனை தட்ஸ்தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அவரது பேட்டி:
கேள்வி: உடனடி டிஎன்ஏ சோதனை செய்வதற்கான நவீன வசதிகள் இலங்கையில் உள்ளதா?
பதில்: எனக்குத் தெரிந்து 2008 வரை அங்கே அப்படிப்பட்ட வசதிகள் இருந்ததாக நினைவில்ல்லை. இலங்கை நீதிபதிகள் சமீபத்தில் பெங்களூர் வந்திருந்தனர். அவர்களுக்கு நாங்கள்தான் தடயவியல் மற்றும் டிஎன்ஏ சோதனைகள் குறித்த பயிற்சி மற்றும் விளக்கங்களை அளித்தோம். அதன்பிறகு அங்கே டிஎன்ஏ சோதனைக்கான வசதிகள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை.
அப்படியே இருந்தாலும், இரண்டு மணி நேரத்திலெல்லாம் டிஎன்ஏ சோதனையை நடத்தி முடிப்பதாகச் சொல்வதென்றால்... என்ன விளையாடுகிறார்களா!. இதென்ன ரத்த, சிறுநீர்ப் பரிசோதனையா...!. பிரபாகரன் உடல் என்று கண்டெடுத்ததாக இவர்கள் காட்டுவது வடக்கு இலங்கையில். கொழும்பிலிருந்து ஃபோரன்ஸிக் லேப்பை அங்கே நகர்த்திக் கொண்டு போய் டெஸ்ட் செய்தோம் என்று சொல்ல வருகிறார்களா...!!.
அடுத்து, டிஎன்ஏ டெஸ்ட் என்பதே லேசுபட்ட காரியமல்ல. இறந்த ஒருவரது ரத்தத்திலிருந்து டிஎன்ஏ பார்க்க முடியாது. உடலின் திசுக்களை எடுத்து தான் சோதிக்க வேண்டும். அதன் பிறகும் கூட நேரடியான முடிவுகள் கிடைக்காது. 'நான்தான் பிரபாகரன்' மரபணு என்று வந்து அது சொல்லிவிடாது. ஒரு பார்கோட் (bar code) மாதிரிதான் உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும். இந்த ரிசல்டை வைத்தும் பிரபாகரன் மரபணு இதுதான் என்றும் கூற முடியாது. அதனுடன் ஒப்பிட, பிரபாகரன் உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள, திசுக்களில் பெறப்பட்ட டிஎன்ஏ சோதனை முடிவுகள் இருக்க வேண்டும்.
இலங்கையிடம் அப்படி ஏதாவது இருக்கிறதா... பிரபாகரன் உயிருடன் இருந்தபோது ராணுவத்தினர் அவரிடம் இருந்து ரத்த, திசு மாதிரிகளை வாங்கி வைத்திருக்கிறார்களா?...
கேள்வி: சார்லஸ் மற்றும் பிரபாகரன் மரபணுக்கள் ஒத்துப் போவதாகச் சொல்கிறார்களே?
பதில்: பிரபாகரன் மகன் சார்லஸ் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு நாள் கழித்தே பிரபாகரன் உடலைக் காட்டினார்கள். இதில் டிஎன்ஏ சோதனை நடத்துவது எப்படி சாத்தியம்?. முட்டாள்தனமான வாதம் இது.
பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்க முயலும் இலங்கை ராணுவம் அதற்காக விஞ்ஞானப்பூர்வ வழிகளை கேலிக்குள்ளாக்குவது போல் பேசி வருவதாகவே எனக்குப் படுகிறது.
கேள்வி: ராணுவம் காட்டியிருப்பது பிரபாகரன் உடல் இல்லை என்று கூறப்படுகிறதே...
பதில்: இதில் சந்தேகங்கள் வருவது இயல்புதான். காரணம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது உண்மையென்றால் அதற்கு 3 வழிகள்தான் உள்ளன. ஒன்று அவர் சயனைடு சாப்பிட்டு இறந்திருக்க வேண்டும். அப்படியென்றால் அதனால் ஏற்பட்ட அறிகுறிகள் காயங்கள் வாய், நாக்கு, முகத்தில் இருந்திருக்கும். ராணுவம் காட்டிய படத்தில் அப்படி எதுவுமே இல்லை.
அடுத்து பிரபாகரன் எப்போதும் பிஸ்டல் வைத்திருப்பவர். தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்றால், அதற்கான சரியான காயங்கள் இருக்க வேண்டும். தலைப் பகுதியில் சுட்டுக் கொண்டிருந்தால் முழுமையாக உருமாறியிருந்திருக்கும். அதற்கும் வாய்ப்பில்லை.
மூன்றாவது சாத்தியம், ராணுவத்தால் சுடப்பட்டு இறந்திருக்கலாம். ராணுவம் அப்படித்தான் கூறுகிறது. டபுள் பேரல் கன் மூலம் சுட்டுக் கொன்றதாக சொல்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால் தலைப்பகுதி மட்டும் காயமடைந்தும், மற்ற பகுதிகளில் சின்ன சுருக்கமோ, கரும் திட்டுக்களோ கூட இல்லாமல் இத்தனை தெளிவாக இருக்கவும் வாய்ப்பே இல்லை.
சுட்டபோது பாதி தலை கழண்டு விடும், ஆனால் முகம் அப்படியே இருக்கும் என்பதை யாராவது நம்புவார்களா...
ஏற்கனவே இறந்தவரை சுட்டிருக்கலாம்...:
நான்காவது சாத்தியக்கூறு ஒன்றும் உள்ளது... அதாவது, ஏற்கெனவே இறந்துவிட்ட உடலில் சுட்டுவிடடு, தாங்கள் கொன்றுவிட்டதாகக் கூறுவது. ராணுவம்[^] அதைத்தான் செய்கிறதா என்று தெரியவில்லை.
கேள்வி: கருணா, தயா போன்றவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்களே...?
பதில்: அது ஒரு சடங்கு. இறந்தவர் உடலை அவருக்குத் தெரிந்தவர்களை வைத்து அடையாளம் காட்டுவது ஒரு நடைமுறை. ஆனால் அதற்கு பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்டதன் உடைகளைக் களைந்து சேறு பூசி காட்ட வேண்டிய அவசியமென்ன... பிரபாகரன் உடலில் உள்ள மச்சங்கள் அவர் மனைவிக்குத்தான் தெரியும். கருணாவுக்கும் தயாவுக்கும் என்ன தெரியும் என்று நிர்வாணப்படுத்திக் காட்டுகிறார்கள்?. இது முழுக்க முழுக்க நாகரிகமற்ற, அபத்தமான செயல்.
கேள்வி: பிரபாகரன் உடலை என்ன செய்வார்கள்?
பதில்: பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதத்தை விடுத்துப் பாருங்கள். 30 ஆண்டுகள் உலகின் கவனத்தைத் தன் மீது திருப்பி வைத்திருந்தவர் பிரபாகரன். அவரது உடல் என்று ஒன்றைக் காட்டும் ராணுவத்தினருக்கு, அது பிரபாகரனுடையதுதான் என்பதை அழுத்தமாக நிரூபித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது.
அதிலும், ஜனநாயக நாடு, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் நாடு என இலங்கையை அறிவித்துள்ள ராஜபக்சே, பிரபாகரன் மரணத்தை உரிய விஞ்ஞான முறைப்படி உறுதிப்படுத்த வேண்டும்.
அடுத்து அவரது உடலை அப்படியே பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினர் அந்த உடலை எப்போது கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு இலங்கைக்கு உள்ளது. போரில் பிடிபட்ட பிணங்களைக் கூட சர்வதேச சட்டப்படி அவர்களது குடும்பத்தினர் இறுதிக் கடன் செய்ய வசதியாக ஒப்படைக்க வேண்டும்.
எனவே பிரபாகரன் உடல் என்று இவர்கள் காட்டுவதை, அந்த மரணம்[^] உறுதியாகும் வரை வைத்திருந்து பின்னர், அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் பேராசிரியர் சந்திரசேகரன்.
சென்னையில் டிஎன்ஏ சோதனை நடத்த திட்டம்?:
இந் நிலையில் அது பிரபாகரன்[^] உடல்தானா என்பதை உறுதி செய்ய சென்னையில் டிஎன்ஏ சோதனை செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
Thanks to Thatstamil
Wednesday, May 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment